ஆசிரமங்களின் வகைகள்.... நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels: ,


அகத்தியர் அருளிய ஐந்து வகையான ஆசிரமங்களில், கடைசி இரண்டு வகை ஆசிரமங்களைப் பற்றி இன்று பார்ப்போம். இவை இரண்டும் மிக உயர் நிலை ஆசிரமங்களாக கூறப் படுகிறது. 

வானப்பிரஸ்த ஆசிரமம்.

காணவே சன்யாச ஆச்சிரமஞ் சொன்னேன்
    கருணையுடன் வானப்பிரஸ்த னாச்சிரமங்கேனே
கோணவே சுகதுக்கம் ரெண்டும்விட்டு
    சூழ்காவிற் கிழங்கருத்திச் சுத்தமாக
பூணவே பனிவெயிலிற் பொருந்திமைந்தா
   புகழ்பஞ்சாக் கினிநடுவி லிருந்துகொண்டு
பேணவே குருபதியில் பெலமாய்நின்றால்
   பிலக்குமடா ஆச்சிரமம் பேணிப்பாரே.

பாரப்பா வானப்பிரஸ்த னாச்சிரமந்தானும்
    பதிவாகி நிற்பதற்கு மந்திரங்கேளு
நேரப்பா தானிருந்து குருவைப்போற்றி
    நீமகனே ஓம்அம்சிவ வசியென்றேதான்
காரப்பா புருவமதில் தினம்நூறுமைந்தா
    கருணையுட ணுருவேறக் காச்சிகாணும்
சீர்பெருகும் வானப்பிரஸ்த நாச்சிரமந்தானும்
   சிவசிவா திறமாகுஞ் சிவயோகம்பாரே.

இந்த வகை ஆசிரமவாசிகள் சுக துக்கங்கள் தங்களை பாதிக்காத நிலையில் இருப்பவர்களாம். மழை வெய்யிலைப் பொருட்படுத்தாமல் கனி, கிழங்கு வகைகளை மட்டும் உணவாக உட் கொள்வார்களாம். பஞ்சாக்கினியின் நடுவில் இருந்து யோகம் நிஷ்டையில் இருந்து வருவார்கள் என்கிறார் அகத்தியர்.

இத்தகையவர்கள் குருவானவரை போற்றி வணங்கி பின்னர் "ஓம் அம் சிவ வசி" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.

அதிவர்ன ஆசிரமம். 

பாராப்பா புலத்தியனே சொன்னவகைநாலும்
    பதிவான அதிலிருந்து மனஞ்செவ்வையானால்
நேரப்பா அதிவர்னாச் சிரமந்தன்னை
     நேர்மையுடன் சொல்லுகிறே னினைவாய்க்கேளு
காரப்பா பிரபஞ்ச மாயைவிட்டு
     கனயோக நிஷ்டைதனைக் கடக்கத்தள்ளி
தேரப்பா செவியுடனே விழியுங்கெட்டு
     சிவசிவா சின்மயமாய்த் தெளிவார்காணே.

தெளிவற்றுச் சுளியற்றுச் செகமுமற்று
     சிவசிவா வென்றதொரு சத்தமற்று
ஒளிவற்று ஆகாச ஓசையற்று
     ஒன்றுமுதல் எட்டுரெண்டு உணர்வுமற்று
நெளிவற்று நினைவற்று நேர்மையற்று
     நேசமுதல் பாசமற்று நிலையுமற்று
அளிவற்று வெளியொளியில் யெங்குந்தானாய்
     அமர்ந்திருந்தா லாதிவர்னாச் சிரமம்பாரே.

முந்தைய நான்கு வகையான ஆசிரமங்களில் வாழ்ந்து கடைத்தேறியவர்கள் மட்டுமே இந்த ஆசிரமத்தில் வசிக்க முடியும் என்கிறார் அகத்தியர். இந்த நிலையானது பிரபஞ்ச மாயைகளையும், நிஷ்டை நிலைகளையும் கடந்து தெளிவற்று, சுழிவற்று, செகமும் அற்று சிவசிவா என்ற ஒலியும் அற்று ஒன்று முதல் எட்டிரெண்டு என்ற உணர்வுகளும் அற்று, நினைவு அற்று, நேசம் முதல் பாசம்வரையான அத்தனை உணர்ச்சிகளும் அற்று எங்கும் நானே என்ற நிலையில் வாழ்ந்திருப்பதே அதிவர்ன ஆசிரம வாழ்கை என்கிறார். 

இப்படியாகவே ஆசிரமங்கள் முற்காலத்தில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவரவர் ஆர்வம், உடல் மற்றும் மன வலிவு, அதைத் தாண்டிய வாழ்வியல் நோக்கம் மற்றும் அதன் தேவைகளைப் பொறுத்து இந்த ஆசிரமஙக்ளின் ஊடே வாழ்ந்திருக்கின்றனர். இத்தகைய வரையறைகள் இன்றைக்கும் பின்பற்றப் படுகிறதா, அல்லது இப்படித்தான் இன்றைய ஆசிரமங்கள் இயங்குகிறதா என்கிற கேள்விக்கான நேர்மையான பதிலை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இந்த தகவல்கள் யாவும் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்டவை.

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

ஆசிரமங்களின் வகைகள்....தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,


பிரமச்சாரி ஆசிரமம்,கிரகஸ்த ஆசிரமம்,சன்யாச ஆசிரமம்,வானப்பிரஸ்த ஆசிரமம்,அதிவர்ன ஆசிரமம் என ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக முந்தைய பதிவில் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாக கருதப் பட்டது என்பதையும் பார்த்தோம். இன்றைய பதிவில் முதல் மூன்று வகைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ள வரையறைகளை பார்ப்போம்.

பிரமச்சாரி ஆசிரமம்.

அறிவான புலத்தியனே சொல்லக்கேளு
     அருமையுள்ள பிர்மசாரி ஆச்சிரமந்தன்னை
நெறியாக ஒருபோது பிச்சைகொண்டு
      நேமமுட னனுதினமும் வேதம்பார்த்து
திறிகால மறவாமல் நிஷ்டை நேமம்
      செய்துமன தறிவாலே யோகஞ்செய்து
குறியாகச் சிகைவளர்த்து எண்ணைதள்ளிக்
      கூர்மையுள்ள பிர்மஆச் சிரமந்தானே.


தானாகத் தானவனாய் மனதுகூர்ந்து
     சங்கையுடன் யிம்முறைதான் தவறாமல்தான்
கோனான குருபதியில் மனதுகூர்ந்து
     குறிப்புடனே செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தேனான அமுர்தம்டா அம்கிலிசிம்மென்று
      சிவசிவா தினம்நூறு செபித்தால்மைந்தா
ஊனான தேகமடா பிர்மமாச்சு
      உத்தமனே பிரமசூச் சிரமஞ்சித்தே.

பிரம்மச்சரிய ஆசிரம வாசிகள் தலைக்கு எண்ணை பயன்படுத்தாமல் முடி வளர்த்திருப்பார்களாம். பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு மட்டும் கொள்வார்களாம். நியம நிஷ்டைகளை தவறாது கடைபிடிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

மேலும் "அம் கிலி சிம்" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம் அதனால் அவர்கள் உடல் பிரம்ம சொரூபமாகுமாம் என்கிறார். இப்படி பிரம்ம சொரூபமானால், இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

கிரகஸ்த ஆசிரமம்.

சித்தியுடன் பிர்மசூச் சிரமஞ்சொன்னேன்
      சிவசிவா கிரகஸ்த னாச்சிரமங்கேளு
பத்தியுடன் கொலைகளவு காமந்தீமை
       பாராமல் சமுசார மார்க்கமாகி
சுததமுடன் சகலவுயிர் தானாயெண்ணி
       சுகிர்தமுடன் தர்மங்க ளீய்ந்துகொண்டால்
வெத்தியுடன் சகலசவு பாக்கியம்பெற்று
       விளங்குமடா கிரகஸ்த னாச்சிரமங்காணே.


காணவே கிரகமதி லிருந்துகொண்டு
      காசினியில் தர்மவா நாகிமைந்தா
பூணவே சற்குருவின் பாதம்போற்றி
       புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தோணவே தானிருந்து புருவமேவி
       சுத்தமுடன் ஓங்றீங் அஙுங்கென்று
பேணவே தானிருந்து செபித்தாயாகில்
       பிலக்குமடா கிரகஸ்த னாச்சிரமம்பாரே.

மனைவி மக்களுடன் இணைந்த குடும்ப வழ்வாக இருந்தாலும் கொலை, களவு, காமம் நீங்கியதாக சகல சௌபாக்கியங்களுடன் வாழ்பவர்களைக் கொண்டது கிரகஸ்த ஆசிரமம்.இவர்கள் பிற உயிர்களையும் தம்தென எண்ணி எவருக்கும் தீங்கிழைக்காமல் குருவின் பாதம் பணிந்து வாழ்பவராக இருப்பார்களாம். 

"ஓங் றீங் அஙுங்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.

சன்யாச ஆச்சிரமம்.

பாரப்பா கிரகிஷ்த னாச்சிரமஞ்சொன்னேன் 
     பதிவான சன்யாசி ஆச்சிரமங்கேளு
சேரப்பா சிகநூல்கள் அகற்றிமைந்தா
     தேகசுத்தி காயாசம் செய்துகொண்டு
காரப்பா தற்பனஓ மங்கள்செய்து
     காலறிந்து சிவயோகக் கருத்தில்நின்று
நேரப்பா பிச்சைகொண்டு அறிவில்நின்றால்
    நிலைத்துதடா சன்யாச ஆச்சிரமங்காணே.


தானான சன்யாசம் பெற்றோர்தானும்
    தன்மையுட னிம்முறைகள் தவறாமற்றான்
தானான பதிநோக்கித் தானேதானாய்
    தன்மையுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தானான விஞ்சையுட ஓம்அய்யும் கிலியுஞ் சவ்வும்
    தன்மையுடன் தினம்நூறு செபித்தாயாகில்
தானான சன்யாசி யாச்சிரமம்மைந்தா
    தன்மையுடன் தானாகத் திறக்குங்காணே.

இத்தகைய ஆசிரம வாசிகள் தேகசுத்தியுடன், தலையை மழித்து துறவுக் கோலத்தில் இருப்பார்களாம். ஹோமம், தர்பனம் போன்றவைகளை செய்கிறவர்களாகவும், தினமும் பிச்சை எடுத்தே உண்பவர்களாகவும் இருப்பார்களாம்.

"ஓம் ஐயும் கிலியுஞ் சவ்வும்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து. இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் கடைசி இரு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

ஆசிரமங்களும் அதன் வகைகளும்...

Author: தோழி / Labels: ,


சித்த மரபு என்றில்லாமல், இந்திய வேத மரபில் குரு சிஷ்ய பாரம்பர்யம் என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்று. கடந்த நூற்றாண்டு வரையில் உயிர்ப்புடன் இருந்த இந்த குருகுல கல்வி முறையானது இப்போது முற்றாக வழக்கொழிந்து விட்டதென்றே கூறலாம். இனி வரும் தலை முறையினருக்கு இப்படி ஒரு வழக்கு இருந்ததே கூடத் தெரியாமல் போகலாம்.

ஆசிரமங்கள் என்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில், ஓலையால் வேய்ந்த குடில்களும், அதனைச் சுற்றியொரு நந்தவனமும் என்பதாகவே மனக் காட்சி விரியும். அங்கே ஒரு குருவும், அவரிடம் பயிலும் மாணவர்களும் இருப்பார்கள். ஏறத்தாழ எல்லா ஆசிரமங்களும் இப்படித்தான் நமக்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.

இவை மட்டும்தானா ஆசிரமம்?, அவற்றில் என்ன நடந்தது?, ஆசிரமங்களில் பிரிவுகள், வகைகள் என ஏதும் இருக்கின்றனவா?... இப்படி தொடரும் கேள்விகளுக்கு அகத்தியரின் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் விளக்கங்கள் கிடைக்கின்றன. அவற்றை தொகுத்துப் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

அகத்தியர் ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

அவையாவன...


பிரமச்சாரி ஆச்சிரமம்

கிரகஸ்த ஆச்சிரமம்

சன்யாச ஆச்சிரமம்

வானப்பிரஸ்த ஆச்சிரமம்

அதிவர்ன ஆச்சிரமம் 


இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாகக் கருதப் படுகிறது. ஒரு ஆசிரம நிலையில் கடைத்தேறியவர்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆசிரம நிலைகளுக்கு போக முடியும் என்பதாகத் தெரிகிறது. இது தற்போதைய ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேற்படிப்பு என்பது போல இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்களை அகத்தியர் பின் வருமாறு உருவகித்துக் கூறுகிறார்.

பார்பிரமச் சாரியடா பிர்மாவாகும்
    பதிவான கிரகஸ்தன் விஷ்ணுவாகும்
நேர்குருவாஞ் சன்யாசம் ருத்திரனாகும்
    நிலைவானப் பிரஷ்தனடா மயேசனாகும்
சீர்பெருகும் ஆதிவர்னாச் சிரமமைந்தா
    சிவசிவா சதாசிவனாய்த் தெளிந்துகொள்ளு
ஆரறிவா ரஞ்சுநிலை விரதம்பெற்று
    அமர்ந்திருப்பான் கோடியிலே ஒருவன்றானே.

பிரமச்சாரி ஆசிரமத்தில் வசிப்பவர்களை பிரம்மனாகவும், கிரகஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்களை விஷ்ணுவாகவும், சன்யாச ஆசிரமத்தில் வசிப்பவர்களை ருத்திரனாகவும், வானப்பிரஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்கள் மகேஸ்வரனாகவும், அதிவர்ன ஆசிரமத்தில் வசிப்பவர்களை சதாசிவனாகவும் உருவகித்துக் கூறுகிறார். மேலும் இந்த ஐந்து நிலைகளையும் கடந்தவர்கள் கோடியில் ஒருவராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!, இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்கள் எத்தகையவர்களாக இருந்தனர்?, அவர்களின் செயல்பாடு எத்தகையதாக இருந்தது? அவர்களின் நோக்கம் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்.... காத்திருங்கள்.